.

கங்குலியை தொடர்ந்து கோலிக்கு அறிவுரை கூறிய சச்சின்!

August 09, 2018, Chennai

Ads after article title

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.


இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, தோல்வியடைந்த நிலையில், இன்று இரண்டாம் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கோலிக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், "இந்திய கேப்டன் விராட் கோலி தனது பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார். அதை அப்படியே தொடர வேண்டும். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, எந்த மாதிரியான விமர்சனங்கள் எழுகிறது என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், என்ன சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அதன் மீது மட்டுமே தொடர்ந்து கவனம் இருக்க வேண்டும். இதயம் அதை நோக்கி உங்களை வழிநடத்தட்டும்.

எனது சொந்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன். கிரிக்கெட்டை பொறுத்தவரை எவ்வளவு ரன்கள் குவித்தாலும் போதாது. நிறைய ரன்கள் சேர்க்கும் வேட்கையுடன் கோலி ஆடுகிறார். இருப்பினும் அவர் எவ்வளவு ரன்கள் குவித்தாலும், அது அவருக்கு போதுமானதாக இருக்காது. மனநிறைவு ஏற்படும் போது, அதன் பிறகு சரிவு தொடங்கி விடும். எனவே ஒரு பேட்ஸ்மேனாக ஒருபோதும் திருப்திபட்டு விடக்கூடாது. பந்து வீச்சாளர்களால் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடியும். ஆனால் பேட்ஸ்மேன்கள் அப்படி இல்லை. களம் இறங்கி எத்தனை ரன்கள் வேண்டும் என்றாலும் எடுத்து கொண்டே இருக்க முடியும். எனவே திருப்தி அடைந்து விடாதீர்; மகிழ்ச்சியுடன் இருங்கள்." என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன்  சவ்ரவ் கங்குலி கோலிக்கு அறிவுரை கூறியிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.