|
சினிமாவில்
30 வருடங்களாக ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கும் ஜாகுவார்
தங்கம், தன்னுடைய மகன் விஜய் சிரஞ்சீவியை வைத்து 'சூர்யா'
என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பின்னணி
வேலைகளிலிருந்த அவர் கூறியதாவது:- சுமார் நாற்பது
வருடங்களுக்கு முன் தூத்துக்குடியிலிருந்து சென்னை
வந்து, சாதாரண ஸ்டண்ட் நடிகராக அறிமுகமாகி, பிறகு
மாஸ்டராக பதவி உயர்வு பெற்று, தமிழ், தெலுங்கு, இந்தி
என்று 549 படங்களுக்கு சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றி
உள்ளேன். முதல்முறையாக ஒரு டைரக்டராக உருவெடுத்துள்ளேன்.
கராத்தேவில் நான்கு பிளாக்பெல்ட், சிலம்பம், குங்பூ,
ஜிம்னாஸ்டிக் கலைகளில் விஜய சிரஞ்சீவியை வைத்து 'சூர்யா'
என்கிற முழுநீள ஆக்ஷன் படத்தை எடுத்துள்ளேன்.
தூத்துக்குடியிலிருந்து பிழைப்பு தேடி சென்னை வரும்
ஒரு சாதாரண இளைஞன் அட்டூழியங்களை அசராமல் செய்து
கொண்டிருக்கும் வில்லனை எதிர்த்து நிற்கிறான். அதனால்
அவன் சந்திக்கும் பிரச்சினைகளை காதல் மோதலுடன்
இப்படத்தின் மூலம் சொல்லி இருக்கிறேன். படத்தின்
நாயகியாக கீர்த்தி சாவ்லா நடித்துள்ளார். இன்னொரு
நாயகியாக தீபா கவர்ச்சியில் கலக்கியுள்ளார்.
புரூஸ்லி தன் படங்களில் பயன்படுத்தும் 'நுன்சாக்'
என்கிற தற்காப்பு கருவியை வைத்து, ஒரு சண்டைக் காட்சியை
படமாக்கியபோது , சுமார் 20 ஸ்டண்ட் நடிகர்களுக்கு
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
இப்படத்தின் பின்னணி இசைக்கு ஹாங்காங் சென்று
வந்துள்ளார் மியூசிக் டைரக்டர் ஜெரோம் புஷ்பராஜ்.
சூர்யா பிரம்மாண்டமான படமாக இருக்கும் என்று உறுதியோடு
சொல்கிறார் ஜாகுவார் தங்கம். |