கோவை பிரதர்ஸ், இங்கிலீஷ்காரன், சண்ட போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ஷக்தி சிதம்பரம். இவரது லேட்டஸ்ட் படம் ராஜாதி ராஜா. லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, இவருடன் ஆறு நாயகிகள் ஆட்டம் போடுகிறார்கள். பல நடிகர்களை வைத்து இயக்கியிருக்கிறேன். ஆனால் முதல் முதலா ஒரு மனுஷனை வைத்து இப்படத்தை இயக்குகிறேன் என்கிறார் ஷக்தி.
இந்தக் கதையை எப்போதோ எழுதிவிட்டாராம். லாரன்ஸ் நடிக்கிறார் என்றதும், அவர் செய்யும் மனிதாபிமான உதவிகளையும் படத்தில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகக் கதையையே மாற்றினேன் என்கிறார் ஷக்தி சிதம்பரம்.
செஸ் ஆட்டத்தில் ராஜாவுக்கு செக் வைப்பார்கள். இந்த கதையில் ராஜாவே மற்றவர்களுக்கு செக் வைக்கிறார். ஆறு வில்லன்கள். லாரன்ஸ் அறிவை பயன்படுத்தி அவர்களோடு மோதும் காட்சிகளில் தியேட்டரில் சூடு பறக்கும் என்கிறார்.
வழக்கமாக இவரது படத்தில் சூட்டைக் கிளப்பும் நமீதா இந்த படத்தில் இல்லை. ஏன் என்றால், இல்லாதவரைப் பற்றி எதுக்கு பேச்சு? அவரை ஈக்குவல் செய்வது மாதிரி ஆறு ஹீரோயின்கள் இருக்கிறார்களே, அவர்களைப் பற்றிப் பேசுவோம் என்கிறார்.
ஆறு ஹீரோயின்களுக்கு ஆறு பாட்டு, ஆறு வில்லன்களுக்கு ஆறு பைட், பிறகு கதைக்கு ஏது நேரம் என்றால், கொஞ்சம் கதை இருந்தா போதும் சார். வந்தோமா, ஜாலியா ரசிச்சோமா, இதுதான் நம்ப பாலிசி. அதுதான் என்னைப் பெரிய தயாரிப்பாளராகவும் மாற்றியிருக்கு. அந்த ஸ்டைலை எதுக்கு மாத்தணும் என்று எதிர்க் கேள்வி போடுகிறார்.
|