போட்டுத் தாக்க முடிவெடுத்து விட்டார் அமீர். உலக மார்க்கெட்டில் நல்ல படங்களுக்கு விலை இருக்கிறது. இதை அடுத்த தலைமுறை இயக்குனர்களுக்கு சொல்லித் தராமலேயே இருந்துவிட்டார் என்று முன்பு மணிரத்னம் மீது புகார் கூறினார். அவர் வழியிலேயே போய், பருத்தி வீரனையும், ராம் படத்தையும் உலக மார்க்கெட்டில் உலவ விட்டுப் பணம் அள்ள வைத்தார்.
இப்போது தனது அஸ்திரத்தை ஏ.ஆர். ரஹ்மான் மீது ஏவியிருக்கிறார். சக்கரக்கட்டி ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையில் இருந்த ரஹ்மானைப் பார்த்து, நானும் இரண்டு படம் எடுத்திட்டேன். பெர்லின் வரைக்கும் போயிட்டு வந்திட்டேன். இதோ தி. நகரிலேயே இருக்கிற ரஹ்மானைத்தான் பார்க்க முடியலை. எங்க படங்களுக்கும் நீங்க இசையமைக்கணும் என்றார். பேசிவிட்டு வந்தமர்ந்த அமீரின் கைகளை பற்றிய ரஹ்மான் அவரிடம் ஏதோ கிசுகிசுத்தார்.
சில தினங்கள் கழித்து இன்னொரு விழாவில், வியாபார ரீதியான படங்களுக்கு இசையமைப்பதில் காட்டுகிற ஆர்வத்தை உணர்வு ரீதியான படங்களுக்கு இசையமைப்பதில் காட்டுவதில்லை என்று ரஹ்மானை ஒரு பிடிபிடித்திருக்கிறார் அமீர். என்ன நடக்கிறதோ இருவருக்குள்ளும்.
|