சிக்கனமாக படம் எடுக்கணும்னு நினைக்கிறவங்க ஓரிடத்தில் செட் போட்டு எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது ஒரு செட். செலவு விஷயத்தில் சிம்பிளாக இருந்தாலும், பார்ப்பவர்கள் பிரமிக்கிற அளவுக்கு செட் போட்டிருந்தார் ஜி.கே. இடம் பிரசாத் ஸ்டுடியோ. படம் காதல்னா சும்மா இல்ல... ஒரு ஊரில் நடக்கும் திருவிழாவில் கடைகளும், நாடகக் கொட்டகையும், சாமி சிலைகளும் இருக்கும்படி அமைத்திருந்தார் ஜி.கே.
ராஜ் டி.வி நிறுவனமும் படத் தயாரிப்பில் இறங்கிவிட்டது. அவர்களின் பிள்ளையார் சுழிதான் இந்த படம். வருடத்திற்கு 12 படங்கள் எடுப்பதென்று முடிவு செய்திருக்கும் இவர்கள் அதைப் பொறுப்பாகக் கவனித்துக்கொள்ளப் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனை நியமித்திருக்கிறார்கள்.
தெலுங்கில் தற்போது 150 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் கம்மியம் என்ற படத்தின் ரீமேக்தான் காதல்னா சும்மா இல்ல. ரவிகிருஷ்ணா, கமலினி முகர்ஜி ஜோடியாக நடிக்கிறார்கள். ஒற்றன் படத்தை இயக்கிய இளங்கண்ணன் இயக்குகிறார். தேஜாஸ்ரீயைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். ஒரு பாடலுக்கு ஆடக் கூடாது என்ற கொள்கையில் இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திய இளங்கண்ணன் அழைத்தவுடன் மறுப்பேதும் சொல்லாமல் ஆடிக் கொடுத்திருக்கிறார் தேஜாஸ்ரீ.
16 நாட்கள் நடந்த படப்பிடிப்பிலேயே பாதிக்கும் மேல் படத்தை முடித்துவிட்டாராம் இயக்குனர். சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அப்படியே ஓடுவது மாதிரியும் எடுத்தால் இன்னும் சந்தோஷப்படலாம்.
|