தண்ணீர்
தரக்கூடிய மூன்று மாநிலங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டு
தமிழகம் இன்னமும் கையேந்தும் நிலையில்தான் இருக்கிறது.
ஒகேனேக்கல் திட்டம் நிறைவேறுமா? இது ஒரு 1,334 கோடி
ரூபாய் கேள்வி.!
1997-ல் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. காவிரி
நதிநீரை எடுத்து அன்றைய தர்மபுரி மாவட்டத்தில்
நாலாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு
வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டது. அப்போது இதன் செலவு
576 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஜப்பானிய
அரசின் நிதி உதவிக்காக அனுப்புவதற்கென அதை மத்திய
அரசுக்கு அனுப்பினார்கள். ஐந்து மாதத்திற்கு பிறகு
வடிகால் திட்டம் ஒன்றையும் இதனுடன் இணைத்து திட்டச்
செலவை 630 கோடி ரூபாயாக உயர்த்தினார்கள்.
1998-ல் மத்திய அரசின் அனுமதியும் கிடைத்தது. இந்த
நேரத்தில்தான், போக்ரான் அணுசோதனை. உண்மையிலேயே அது ஒரு
சோதனை. இந்தியாவில் எந்தத் திட்டத்திற்கும்
உதவப்போவதில்லை என்று ஜப்பானிய அரசாங்கம் முடிவு
செய்தது.
அணுசோதனையின் புகை மறைந்த பிறகு, மீண்டும் இதை
ஜப்பானிய அரசிடம் வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக்
கொண்டோ ம். ஆனால், இத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டதால்,
திட்டச் செலவு 1334 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது.
இந்த ஆண்டு பிப்பரவரியில் ஜப்பானிய அரசும் தலையசைத்தது,
முதலமைச்சரும் அடிக்கல் நாட்டிவிட்டார்.
பிறகு என்ன? எடியூரப்பா ஒகேனேக்கல் வந்தார். தமிழகம்
இந்தத் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று அவரும்,
கர்நாடகத்தில் பல அமைப்புக்களும் குரல் எழுப்பினார்கள்.
அதையடுத்து தமிழகச் சட்டப்பேரவை ஒருமனதாக தீர்மானம்
நிறைவேற்றியது.
இந்த நேரத்தில் கருணாநிதி ஏதோ கூறிவிட்டார் என்ற
சாக்கில், தமிழர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தமிழகத்திலோ கன்ன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்.
பேருந்துகள் எரிக்கப்பட்டன. கன்னட மக்களை கருணாநிதி
ஆத்திரமூட்டியதாக எஸ் எம் கிருஷ்ணா கூறினார்.
ஆத்திரமூட்டும்படி தாம் எதுவும் கூறவில்லை என்று
கருணாநிதி விளக்கினார்.
இரு மாநிலங்களிலும் திரைப்பட நடிகர்களும்,
நடிகைகளும் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து தங்கள்
உடலுக்கு உதவி செய்து கொண்டார்கள்.
அடுத்து, என்ன சொல்வது?
கர்நாடகத்தில் புதிய அரசு அமையும்வரை திட்டம்......
பொறுமை காக்கும் என்று கருணாநிதி கூறினார்.
இப்போது புதிய அரசு அமையப்போகிறது. அநேகமாக,
ஒகேனேக்கல் திட்டத்திற்கு எதிராக முதலில் தொண்டை கிழிய
குரல் எழுப்பிய எடியூரப்பாதான் அண்டை மாநிலத்தின்
முதல்வராகிறார். அவர் என்ன செய்யப் போகிறார்? அவர் ஒரு
தேசியவாதி என்றும், ஆதலால் குறுகிய மாநில நோக்கில் இதை
பார்க்க மாட்டார் என்று தமிழக பாஜக-வின் தலைவர்
தம்முடைய பங்கிற்கு கூறியிருக்கிறார்.
ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்திற்கு தண்ணீர்
கொடுத்து இவர் கன்னடர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க
விரும்புவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
என்ன நடக்கும் என்பது ஆள்பவருக்கு தெரியுமோ,
தெரியாதோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.
ஒகேனேக்கல் என்பது, கன்னடச் சொல். தண்ணீர் கல்லில்
வந்து விழும்போது அதிலிருந்து கிளம்பும் புகையை இது
குறிக்கிறது. நெருப்பில்லாமலும் புகையும்.
பொறுத்திருப்போம். |