பழிக்குப்
பழி தீர்ப்பது, எதிரிகள் என்று யாரையேனும் நினைத்து
அவர்களுக்கு கெடுதல் செய்வது, கெடுதல் செய்ய முற்படுவது,
இவற்றையெல்லாம் நம்மைச் சுற்றி நாம் பார்த்து வருகிறோம்.
மற்றவர்களுக்கும் நம்மைப்போன்றே உணர்வுகள் உள்ளன என்று
எண்ணினால் பல செயல்களில் நாம் ஈடுபட மாட்டோ ம். நாம்
ஒரு செயலில் ஈடுபடும்போது, எவ்வளவுதான் நமது மனச்சாட்சி
உறுத்தினாலும், அது மிகச் சரியான செயல் என்றே நாம்
எண்ணுவோம். இது தவிர்க்க முடியாதது.
பிரவீண் மஹாஜன் செய்த செயலும் இப்படிப்பட்டதுதான்.
தனது சகோதரரின் போக்கு பிடிக்காமல், அவரது வாழ்க்கையை
முடிவுக்குக் கொண்டுவர எண்ணினார். இல்லையென்றால், ----
அன்று காலை தமது வீட்டிலிருந்து தமது சகோதரர் பிரமோத்
மஹாஜனின் வீட்டிற்க்கு புறப்படும்போது துப்பாக்கியை
எடுத்துக் கொள்வானேன்? அதிலும் குண்டுகளை நிரப்பி ஏன்
எடுத்துக் கொள்ளவேண்டும்? அதுமட்டுமல்ல. அந்தத்
துப்பாக்கியை ஏன் பிரமோத் வீட்டிற்குள் எடுத்துச்
செல்லவேண்டும்? சரி இதையும் விட்டுவிடுவோம்.,
இரண்டு-மூன்று நாட்களுக்கு முன் பதின்மூன்று லட்சம்
ரூபாயை தமது வங்கிக் கணக்கிலிருந்து தமது மனைவியின்
வங்கிக் கணக்கிற்கு மாற்றுவானேன்? ஆக, இது திட்டமிட்டு
செய்த கொடிய செயல் என்றே தோன்றுகிறது. பிரமோத் மஹாஜன்
இருக்கக்கூடாது. அவர் இருப்பது தனக்கு பிடிக்கவில்லை.
ஆதலால் அவரை தீத்துக்கட்ட வேண்டும். அப்படித்தானே!
ஆனால், அதோடு முடிந்துவிடுவதில்லை. பிரமோத் மஹாஜனின்
குடும்பம். அது எந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது?
கணவனை இழந்த மனைவி, தந்தையை இழந்த மக்கள்... இப்படி
சின்னாபின்னமாகிவிட்ட ஒரு குடும்பம்....., இப்போது
நீதிமன்றம் பிரவீணுக்கு ஆயுள் தண்டனை விதித்துவிட்டது.
இதை எதிர்த்து அவரும், இந்த தண்டனை போதாது, தூக்கு
தண்டனை கொடுக்கவேண்டும் என்று அரசுத் தரப்பும்
மேல்முறையீட்டுக்கு போகக்கூடும். அதுவேறு விஷயம். ஆனால்,
எப்படி பிரமோத் மஹாஜன் குடும்பம்
சின்னாபின்னமாகிவிட்டதோ, அதேபோல பிரவீணின் குடும்பமும்
சின்னாபின்னமாகிப் போய்விட்டது.
விளைவு இத்துடனும் நின்றுவிடவில்லை. அவர்களது
தாயாரின் மனம்....எப்படி துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்?!
இதை நாம் நினைத்து பார்க்க முடியுமா? ஒரு மகன், இன்னொரு
மகனை கொலை செய்துவிடுகிறான். ஒருவன் உலகைவிட்டே
போய்விட்டான். மற்றொருவன் சிறையில்.... இருவரது
குடும்பங்களும் தந்தையின் அரவணைப்பு இல்லாமல்,
தத்தளிக்கும் நிலைமை. அந்தத் தாயின் ரத்தக் கண்ணீரை
யாரால் துடைக்க முடியும்? உண்மையிலேயே ஆயுள் தண்டனை
அனுபவிப்பது, ஒரு பாவமும் அறியாத அந்தத் தாய்தான்.
இவை அனைத்திற்கும் காரணம்... பிரவீணின் மனதில்
ஏற்பட்ட ஒரு எண்ணம் அந்த எண்ணத்தின் விளைவுகள், எவ்வளவு
பயங்கரமானவை. இனிமேலாவது நமது இளைஞர்கள் இத்தகைய தகாத
செயல்களை செய்யாமல் இருக்கட்டும். தீய எண்ணங்கள்
அவர்கள் உள்ளத்திற்குள் புகாமல் இருக்கட்டும். மனிதனால்
ஏற்படும் துன்பங்களை தவிர்ப்பது நம் கையில்தான்
இருக்கிறது.
ஹெச். ராமகிருஷ்ணன்
|