|
குழந்தைகளின் பால் பற்களைப் பற்றி அநேக பெற்றோர்
கவலைப்படுவதில்லை. விரைவில் விழுந்து விடப்போகும்
பற்கள்தானே, இவற்றைப் பராமரிக்க ஏன் வீண் சிரத்தை
எடுத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணுகின்றனர். இதனால்
நம் நேரமும், பணமும்தானே வீணாகிறது என்பது அவர்களது
வினா. இந்த வினாவுக்கு விடை அளிக்க வேண்டியது நமது கடமை.
மனிதர்களுக்கு மட்டுமல்ல. குட்டி போட்டுப் பால்
கொடுக்கும் மிருகங்களுக்கும் இரண்டு முறை பற்கள்
முளைக்கின்றன. குழந்தை பிறந்த சில மாதங்களில் முதல்
பல்வரிசை தோன்றுகிறது. இரண்டாவது நிலையான பல்வரிசை,
முதல் பல்வரிசை (பால் பற்கள்) விழுந்த பின்னர்
முளைக்கின்றன. அவை வாழ்நாள் முழுவதும் நீடிக்கின்றன.
தாயின் கருவில் இருக்கும் ஆறாவது மாதத்திலேயே
குழந்தைக்குப் பால் பற்கள் உருவாக ஆரம்பித்து
விடுகின்றன. நாளடைவில் இவை பிடிமானம் அடைகின்றன.
பிறந்த ஆறாவது மாதத்தில், குழந்தையின் பல் வரிசைக்கு
அழகான வடிவம் கிடைக்கிறது. குழந்தை பிறந்த ஆறாவது மாதம்
முதல் பதினைந்து மாதத்தித்க்குள் கீழ் முன்வாய்ப்பல் (உளிப்பல்
அல்லது வெட்டுப்பல்) முதலில் வெளிப்படுகிறது. தொடர்ந்து,
குழந்தையின் மூன்று வயதுக்குள் எல்லாப் பால் பற்களும்
முளைத்துவிடுகின்றன. |