|
மழலையரின் பற்கள்
பிறந்த குழந்தைகயின் வாயில் பற்கள்
இருப்பதில்லை, தாடையின் உள்ளே உருவாகும் பற்கள்,
குழந்தையின் பரிமாண வளர்ச்சியின் சார்பாக சுமார் 6
மாதம் முதல் 15 மாதங்கள் வரை முதல் பால் பற்கள்
முளைக்க ஆரம்பிக்கின்றன. சுமார் 20 மாத அளவில் எல்லா
பால் பற்களும் வாயினுள் முளைத்துவிடும். இதுவரை
தாய்பால் பெற்று வளரும் குழந்தை, இனி திட உணவு ஏற்றுக்
கொள்ள இந்த பற்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
மழலை மொழி நீங்கி சாதாரண பேச்சு மொழி வளரவும், பால்
பற்கள் உதவுகின்றன.
முதல் பற்கள் முளைக்கும்போது, சில
குழந்தைகள் உடல் தளர்ச்சியாகவும், இளகிய மலம்
கழிப்பதாகவும், உடல் சூடாகவும் இருக்கும். இதனை
ஆங்கிலத்தில், "Teething Trouble" அதாவது "முதற் பற்கள்
முளைக்கும் பாதிப்பு" என்பார்கள். இதற்கு முறைப்படி
வைத்தியம் செய்தால் போதும்.
பால் பற்கள் விழுந்து புதுப்பற்கள்
முளைப்பதனால், பலர் "பால் பற்களுக்கு அக்கறை ஏன்?"
என்பார்கள். நிரந்தரப் பற்களுக்கு ஆரோக்கியம் வழங்க
பால் பற்கள் நன்றாக பேணப்படவேண்டும். மேலும் சிசு
பிராயத்திலிருந்து வாலிப பருவம்வரை, சீரான முக
வளர்ச்சிக்கு பால் பற்கள் தேவை. |