பிரதமா் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம், வாரணாசிக்கு இன்று சென்றாா். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.3,880 கோடி மதிப்பீட்டிலான 44 நலத் திட்டங்களை பிரதமா் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். பிரதமா் தொடங்கி வைத்த திட்டங்களில் பெரும்பாலானாவை கிராமப்புற மேம்பாடு சாா்ந்தவையாகும். இதில் 130 குடிநீா் திட்டங்கள், 100 புதிய அங்கன்வாடி மையங்கள், 356 நூலகங்கள், பிண்ட்ரா பகுதியில் புதிய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசுக் கலை கல்லூரி ஆகியவை அடங்கும். ராம் நகரில் உள்ள காவல்துறை வளாகத்தில் ஒரு விடுதியையும் பிரதமா் மோடி திறந்து வைத்தாா். நகா்ப்புற வளா்ச்சித் திட்டமாக, ரெயில்வே மற்றும் வாரணாசி மேம்பாட்டு ஆணையம் இணைந்து சாஸ்திரி மற்றும் சாம்னே படித்துறையில் மேற்கொண்ட மறுசீரமைப்புத் திட்டங்களை அவா் தொடங்கி வைத்தார். வாரணாசியில் புதிதாக 15 துணை மின்நிலையங்கள், புதிய மின்மாற்றிகள், 1500 கி.மீ. தொலைவுக்கு புதிய மின்பாதை அமைப்பு உள்பட ரூ.2,250 கோடி மதிப்பீட்டிலான 25 திட்டங் களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். வாரணாசி விமான நிலையத்தின் விரிவாக்கமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம், நகரில் 3 புதிய மேம்பாலங்கள் மற்றும் பல்வேறு சாலைகளின் விரிவாக்கத் திட்டங்கள், ஷிவ்பூா், உ.பி. கல்லூரி ஆகிய இடங்களில் 2 புதிய விளையாட்டு மைதானங்கள், பள்ளி புனரமைப்புப் பணிகள் ஆகிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். ரோஹனியா பகுதியில் உள்ள மெந்திகஞ்சில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் இருந்து பிரதமா் மோடி திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- காசி இனி பழங்காலத்தின் சின்னம் மட்டுமல்ல, அது முன்னேற்றத்தின் மாதிரியாக கூடவும் இருக்கிறது. 10 ஆண்டுகளில் வாரணாசி மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. வளர்ச்சியில் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது. வரும் மாதங்களில், அனைத்து வளர்ச்சிப் பணிகளும் நிறைவடையும் போது, வாரணாசிக்குச் செல்வதும், அங்கிருந்து திரும்புவதும் எளிதாகிவிடும். வேலை, வணிகங்களில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டுத் துறையில் காசி இளைஞர்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த பாடுபடுகிறோம். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அதற்கு ஒரு புதிய ஆற்றலை வழங்குவதற்கும் செயல்பட்டு வருகிறோம். தேசத்திற்கு சேவை செய்யும் உணர்வோடு, ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். இதற்கு நேர்மாறாக, அதிகார வெறி கொண்டவர்கள் இரவும் பகலும் அரசியல் விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். இது தேசிய நலனுக்காக அல்ல. அவர்களின் குடும்பத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் ஒருமித்த கவனம் செலுத்துகிறார்கள். சிலர் வாரிசு அரசியலை நம்புகிறார்கள். அதிகாரத்தைப் பெறுவதற்காக விளையாடுபவர்கள் தங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்தில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Read More